Saturday, December 4, 2010

தொற்று நோய்கள் இன்னும் இன்னும்……… கூடுமா?

    தற்போது டெங்கு நோயின் தீவிரம் சற்றேகுறைந்துவிட்டது எனினும் நெருப்புக் காயச்சல்  போன்ற நீரால்த் தொற்றும் நோய்கள் பற்றிக் கவனத்திற் கொள்ள வேண்டியது மக்களின் முக்கிய கடமையாகும்.

     நீரூடாக நெருப்புக்காய்ச்சல், வாந்திபேதி, கொலரா போன்ற பல நோய்கள் ஏற்படும்  என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவை பற்றி விபரிப்பதில் அர்த்தமில்லை. இவற்றின் தோற்றுவாய்களை இனங்கண்டு துரித கதியிற் செயற்பட வேண்டியே உள்ளது. இதுவே காலத்தின் தேவையாகும். தற்போது யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறை மிகவும் விறுவிறுப்பாக வீறுநடை போடுகிறது என்றே சொல்லாம். எனினும் மிகமிகக் குறைந்த வசதிகளுடனேயே அதுநடை பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

     குறிப்பாக மருத்துவ ரீதியாக அதாவது சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு வீடுகள் அமைக்கப்படும்போது பல விடயங்கள் கணக்கில் எடுக்கப்படும். அவை எல்லாம் ஒருபுறம் இருக்க நெருக்கடி அதிகரித்;து விட்டது. மேலும் மேலும் தொற்றுநோய்கள் உருவாகின்றதற்கான நிரந்தர மூலங்கள் உருவாக்கப்படும் நிலமை ஏற்படுகின்றது. எமது மண்ணில் நோய் இனங்காணப்படுவதும் அதற்கான மூலம் எதுவென இனங்காண்பதற்கும் இரசாயன ஆய்வு வசதிகள் போதாத நிலை காணப்படுகின்றது. எமது கல்வி பெரிதும் பரீட்சையை மட்டுமே நோக்காகக் கொண்டு எந்தவொரு ஆய்வுகளும் திறம்பட நடப்பது என்பது அரிதாகவே காணப்படுகின்றது. இப்படியான நிலையில் புதிய வகையான சூழலுக்கு, சகிக்கும் திறன் கூடிய நோய்க்கிருமிகள் உருவாகும் சந்தர்ப்பம் அதிகம்  ஏற்படலாம்.

     உதாரணமாக நெருப்புக்காய்ச்சல் எனின் எந்தவகையான நுண்ணுயிரி அதை உண்டு பண்ணுகின்றது என்பதை இனங்கண்டு அதை அழிப்பதற்குரிய வகையான நுண்ணுயிர் கொல்லிகளைப் பயன்படுத்தலாம். பொதுவாக எல்லா நுண்ணுயிர் கொல்லிகளும் எல்லா வகையான நுண்ணங்கிகளையும் கொல்லுமா? என்றால் இல்லை என்றே கூற வேண்டும். இவற்றின் தொழிற்பாடும், ஒரு ஏவுகணை விமானத்தை எவ்வாறு தாக்குகிறது என்பது போன்றுதான் வெப்ப நாடிவகை ஏவுகணைகள் வெப்பத் தோற்றுவாய்கள் இருப்பினே விமானத்தைத் தாக்கும் அதுபோன்றே நுண்ணங்கிகளையும் சிலவகை அடையாளப்படுத்தல் ஊடே நுண்ணுயிர்க் கொல்லிகள் தாக்குகின்றன. இவ்வகை அடையாளப்படுத்தல் என்பது சில புதியவகை விகாரத்திற்குள்ளான நுண்ணங்கிகளில் சாத்தியமற்றதே இதனால் மருந்தின் தாக்கும் வலுவும் குறைந்து போகின்றது. மருந்து பயன்படுத்தியும் கட்டுப்படு;தமுடியாது பேகின்றது..

     இவையாவற்றினையும் விஞ்சி எமது மக்களிடம் சுயமருந்துப் பாவனையும் மருந்துகளின் தவறான பாவனையும் மித மிஞ்சிய நிலையில் காணப்படுகின்றது. நுண்ணுயிர் கொல்லி மருந்துகளின் பாவனையும் அதிகரித்துவிட்டது. எனவே மருந்துகளுக்குப் பழகிப்போன கிருமிகள் என்ற நிலை காணப்படுகிறது. எனவே நொய் கட்டுக்கடங்காத நிலை உருவாகவும் கூடும்

     தற்போது உள்ள நடப்பு யாழ்ப்பாணத்தில் மலக்கழிவுகள் குடிநீரில் கலக்கும் தகவு மிகையாகவே காணப்படும் நிலை உருவாகிவருகிறது. குறிப்பாக மண்ணின் வடிகட்டும் தகவு பற்றிய எண்ணக்கருக்கள் எவ்வளவு தான் எற்புடையதே என்று கேட்கும் அளவிலே தான் உள்ளன… ;. மற்றும் மலக்கழிவில் பல நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட வகையான நுண்ணுயிரிகள் ஒரு நோயை உண்டு பண்ணும் சந்தர்பம் காணப்படுகிறது. இதனால் ஏற்படும் நோயும் குறித்த ஒருவகையான நுண்ணுயிர் கொல்லியால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் இவற்றுடன் இந்நுண்ணுயிரிகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள போதியவசதிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் இது மேலும் கடினமாகிறது.

     இதைவிட நகரின் நெருக்கடி கூடிய பகுதிகளில் மலசல கூடங்களின் அதிகரித்த பாவனை ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்துறை மேலும் விருத்தி செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறான நிலையில் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களிடம் இவை ஒப்படைக்கப்படின் வேலைவாய்ப்பு வசதிகள் அதிகரிக்கும்@ அத்துடன் சுத்திகரிப்பு தேவை இயன்றளவு பூர்த்தி செய்யப்படும் நிலை உருவாகும்.

     இவ்வாறான சுகாதார வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். இல்லாவிடின் நீர் மூலம் தொற்று ஏற்படுவதற்கான நிரந்தர தோற்றுவாயாக குடிநீர் அமையும் தன்மை காணப்படும். இவை மட்டுமல்லாது தோல் நோய்களும் கூடவே ஏற்படும் தகவும் உருவாகும்.